கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, சர்ச்சைக்குரிய மாநிலத்துக்கு ஒரு ஓட்டுரிமை பரிந்துரையை நீக்கியுள்ளது.
புதுடெல்லி,

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அதன் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையில் கமிட்டியை அமைத்தது.

அந்த கமிட்டி பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, ‘இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் மாநிலத்துக்கு ஒரு ஓட்டுரிமை மட்டுமே வழங்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கிரிக்கெட் வாரிய பதவிகளில் இருக்கக்கூடாது, நிர்வாகிகளின் உச்சகட்ட வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்க வேண்டும், கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் யாரும் தொடர்ச்சியாக பதவியில் நீடிக்க கூடாது, பதவி காலத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் இடைவெளி விட வேண்டும், இரட்டை ஆதாய பொறுப்புகளை வகிக்கக்கூடாது’ என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தது.

லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. ஆனால் இவற்றில் சில நிபந்தனைகளுக்கு கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்தது. குறிப்பாக ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டுரிமை என்ற சிபாரிசை ஏற்க மறுத்ததுடன், பரிந்துரைகளை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தியது. இதனால் கோபமடைந்த சுபரீம் கோர்ட்டு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே இருவரையும் அதிரடியாக பதவியில் இருந்து நீக்கியது. இதையடுத்து கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க வினோத் ராய் தலைமையில் நிர்வாக கமிட்டியை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.

இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய சட்டவரைவுக்கு தங்களது யோசனைகளை தெரிவிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தையும், மாநில கிரிக்கெட் சங்கத்தையும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. அப்போது கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சார்பில் லோதா கமிட்டியில் உள்ள சில சிக்கலான பரிந்துரைகளை தளர்த்த வேண்டும் என்று மீண்டும் முறையிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், லோதா கமிட்டியின் பரிந்துரைகளில் குறிப்பிட்ட சில அம்சங்களை நீக்கிவிட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்தனர்.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்கும் வகையில் மாநிலத்துக்கு ஒரு ஓட்டுரிமை என்ற பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு தளர்த்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் குஜராத், சவுராஷ்டிரா, பரோடா ஆகிய மூன்று கிரிக்கெட் சங்கங்களும், மராட்டிய மாநிலத்தில் மராட்டியம், மும்பை, விதர்பா ஆகிய கிரிக்கெட் சங்கங்களும் பி.சி.சி.ஐ.-ல் முழு உறுப்பினர் அந்தஸ்து மற்றும் ஓட்டுரிமை பெற்றிருந்தன. இவற்றுக்கு தான் லோதா கமிட்டி ‘செக்’ வைத்திருந்தது. ஆனால் ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டுரிமை முறை வேண்டாம் என்ற முடிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு வந்திருப்பதன் மூலம் அந்த மாநிலங்கள் தங்களது ஓட்டுரிமையை தக்க வைத்துள்ளன.

ரெயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம், சர்வீசஸ் ஸ்போர்ட்ஸ் கவுன்சில், அகில இந்திய பல்கலைக்கழக சங்கம் ஆகியவை தனி மாநிலம் கிடையாது என்பதால் அவற்றுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முழு அங்கீகாரம் அவசியமில்லை என்று லோதா கமிட்டி கூறியிருந்தது. ஆனால் ரெயில்வே, சர்வீசஸ், பல்கலைக்கழக சங்கம் ஆகிய அமைப்புகள் முழு உறுப்பினர் அந்தஸ்து மற்றும் ஓட்டுரிமையுடன் தொடர கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

அதே சமயம் தேசிய கிரிக்கெட் கிளப் (கொல்கத்தா), கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா (மும்பை) ஆகியவை முதல்தர கிரிக்கெட் போட்டிகளுக்கு அணிகளை அனுப்புவது இல்லை என்பதால் அவ்விரு கிளப்புகளுக்கு கிரிக்கெட் வாரியத்தில் உறுப்பினர் அந்தஸ்து கிடையாது என்று கோர்ட்டு தெளிவுப்படுத்தியுள்ளது.

இதே போல் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் 3 ஆண்டுகள் பதவியில் இருக்கும் ஒருவர், தொடர்ந்து இன்னொரு முறை நீடிக்கவும் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி ஒரு நிர்வாகி தொடர்ந்து 6 ஆண்டுகள் வரை பதவியில் இருக்க முடியும். ஆனால் இரண்டு முறை தொடர்ந்து பதவி வகித்தால், அடுத்த 3 ஆண்டுகள் கட்டாயம் இடைவெளி விட வேண்டும்.

திருத்தங்களுடன் கூடிய புதிய விதிமுறைகளை 4 வார காலத்திற்குள் தமிழ்நாடு சங்கங்களின் பதிவாளரிடம் முறைப்படி பதிவு செய்யும்படி பி.சி.சி.ஐ.-க்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டுள்ளது. அத்துடன் புதிய விதிமுறைகளை மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஒரு மாதத்திற்குள் கட்டாயம் அமல்படுத்த வேண்டும்; இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

புதிய விதிமுறை அமலுக்கு வந்ததும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படும். தற்போதைய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி, பொருளாளர் அனிருத் சவுத்ரி இருவரும் 6 ஆண்டுகளுக்கு மேல் கிரிக்கெட் வாரியம் மற்றும் தங்களது மாநில சங்கங்களில் பொறுப்பு வகிப்பதால் அவர்கள் மீண்டும் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்றுள்ள கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய், ‘இது அருமையான தீர்ப்பு. நிர்வாகிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவியில் நீடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் கூட அதைத் தான் வற்புறுத்தி இருந்தோம்’ என்றார்.