வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 322 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி, அம்பதி ராயுடு ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ்க்கு 322 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா.

Update: 2018-10-24 12:25 GMT
விசாகபட்டினம்,

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் கலீல் அஹமது நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா, இந்த ஆட்டத்தில் சொற்ப ரன்களில் வெளியேறினார். 4-வது ஓவரை ரோச் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்தியா முதல் 8 ஓவரில் 39 ரன்கள் எடுத்திருந்தது. 9-வது ஓவரை நர்ஸ் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் தவான் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். தவான் 30 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 29 ரன்கள் சேர்த்தார்.

3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 10.1 ஓவரில் 10 ரன்னைத் தொட்ட இந்தியா, 19.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 25 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. 25-வது ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலி 56 பந்தில் அரைசதம் அடித்தார்.

விராட் கோலியைத் தொடர்ந்து அம்பதி ராயுடு 61 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின்னர் அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 80 பந்தில் 8 பவுண்டரியுடன் 73 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

விராட் கோலி - அம்பதி ராயுடு ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 139 ரன்கள் குவித்தது. அம்பதி ராயுடு ஆட்டமிழந்ததும் எம்எஸ் டோனி களம் இறங்கினார். இவர் 25 பந்தில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து களம் இறங்கிய ரிஷப் பந்த் 13 பந்தில் 17 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஜடேஜா களம் இறங்கினார். இதற்கிடையில் விராட் கோலி சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். சிறப்பாக விளையாடிய அவர் 106 பந்தில் 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார். இது அவரின் 37-வது ஒருநாள் சதம் ஆகும்.

சதம் அடித்த பின்னர் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 47-வது ஓவரில் இரண்டு சிக்சரும், 48-வது ஓவரில் ஒரு சிக்சரும், இரண்டு பவுண்டரியும் விளாசினார். 

49-வது ஓவரில் இந்தியா பவுண்டரி ஏதும் அடிக்கவில்லை. ஜடேஜா 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 322 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

விராட் கோலி 129 பந்தில் 157 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷமி கடைசி பந்தை சந்தித்து அதில் ரன் அடிக்கவில்லை.

மேலும் செய்திகள்