ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 249 ரன்கள் சேர்ப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

Update: 2018-12-06 21:30 GMT

சென்னை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு–கேரளா (பி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. அபினவ் முகுந்த் ரன் எதுவும் எடுக்காமலும், பாபா அபராஜித் 3 ரன்னும், கவுசிக் காந்தி 16 ரன்னும், தினேஷ் கார்த்திக் 4 ரன்னும், ஜெகதீசன் 21 ரன்னும், கேப்டன் பாபா இந்திரஜித் 87 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஷாருக்கான் 82 ரன்னுடனும், முகமது 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். கேரளா அணி தரப்பில் சந்தீப் வாரியர் 3 விக்கெட்டும், பாசில் தம்பி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இன்று 2–வது நாள் ஆட்டம் நடக்கிறது.

கேரளாவில் உள்ள வயநாட்டில் நடைபெறும் புதுச்சேரி–சிக்கிம் அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த புதுச்சேரி அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பராஸ் டோக்ரா 244 பந்துகளில் 30 பவுண்டரி, 7 சிக்சருடன் 253 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

மேலும் செய்திகள்