கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: புஜாரா 3-வது இடத்துக்கு முன்னேற்றம் - விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் புதிய சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் புஜாரா 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் புஜாரா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 21 இடங்கள் உயர்ந்து 17-வது இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார்.

சிட்னியில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. மழையால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இருப்பினும் இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் மாற்றமின்றி முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் 897 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறார்.

ஆஸ்திரேலிய தொடரில் மொத்தம் 521 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை பெற்ற ‘இந்திய அணியின் தூண்’ புஜாரா தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளார். சிட்னி டெஸ்டில் 193 ரன்கள் எடுத்து அசத்திய அவர் 47 புள்ளிகளை சேர்த்து மொத்தம் 881 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (874 புள்ளி) ஒரு இடம் குறைந்து 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (5-வது இடம்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (6-வது இடம்), நியூசிலாந்தின் ஹென்றி நிகோல்ஸ் (7-வது இடம்) ஆகியோரின் இடங் களில் மாற்றம் இல்லை.

இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், சிட்னி போட்டியில் 7-வது வரிசையில் களம் புகுந்து 159 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் 116 புள்ளிகளை கூடுதலாக சேகரித்த அவர் தரவரிசையில் கிடுகிடுவென உயர்ந்து, 38-வது இடத்தில் இருந்து 17-வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளார். அத்துடன் தனது ஒட்டுமொத்த புள்ளி எண்ணிக்கையை 673 ஆக உயர்த்தி, புதிய உச்சத்தை தொட்டுள்ளார். முழுநேர இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிகபட்சமாக பரூக் என்ஜினீயர் 1973-ம் ஆண்டு 17-வது இடத்தை பிடித்திருந்தார். அவரது சாதனையை ரிஷாப் பான்ட் சமன் செய்துள்ளார். அதே சமயம் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிக தரவரிசை புள்ளிகளை குவித்த விக்கெட் கீப்பராக 21 வயதான ரிஷாப் பான்ட் திகழ்கிறார். இந்த வகையில் அவருக்கு அடுத்த இடங்களில் டோனி (662 புள்ளி), பரூக் என்ஜினீயர் (619 புள்ளி) உள்ளனர். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட டோனிக்கு, தரவரிசையில் 19-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாகும்.

ரவீந்திர ஜடேஜா 57-வது இடத்திலும் (6 இடம் உயர்வு), மயங்க் அகர்வால் 62-வது இடத்திலும் (5 இடம் ஏற்றம்), ரஹானே 22-வது இடத்திலும் (4 இடம் சறுக்கல்) உள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 78 ரன்கள் சேர்த்த தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் 7 இடங்கள் எகிறி 10-வது இடத்தை பெற்றுள்ளார். இதே டெஸ்டில் சதம் அடித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 6 இடங்கள் உயர்ந்து 16-வது இடத்தை பிடித்திருக்கிறார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் இரு இடங்களில் தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா (893 புள்ளி), இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (874 புள்ளி) தொடருகிறார்கள். தென்ஆப்பிரிக்காவின் வெரோன் பிலாண்டர் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை (804 புள்ளி), ஆஸ்திரேலியாவின் கம்மின்சுடன் பகிர்ந்துள்ளார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் அதிகரித்து 5-வது இடத்தை (794 புள்ளி) பெற்றுள்ளார். காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆடாத இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் சரிந்து 9-வது இடம் வகிக்கிறார்.

மற்ற இந்திய பவுலர்கள் பும்ரா 16-வது இடத்திலும், முகமது ஷமி 22-வது இடத்திலும், குல்தீப் யாதவ் 45-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசனின் (416 புள்ளி) ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை. இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3-ல் இருந்து 2-வது இடத்துக்கு (387 புள்ளி) நகர்ந்துள்ளார்.

அணிகளின் தரவரிசையில் இந்தியா 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இடங்களில் இங்கிலாந்து (108 புள்ளி), நியூசிலாந்து (107 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (106 புள்ளி), ஆஸ்திரேலியா (101 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன.


தொடர்புடைய செய்திகள்