இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் அணி 154 ரன்னில் சுருண்டது

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 154 ரன்னில் சுருண்டது.

Update: 2019-02-11 23:00 GMT
செயின்ட் லூசியா,

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 277 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47.2 ஓவர்களில் 154 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேம்ப்பெல் 41 ரன்னும், ஷேன் டோவ்ரிச் 38 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க்வுட் 5 விக்கெட்டும், மொயீன் அலி 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 123 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்து இருந்தது. ரோரி பர்ன்ஸ் 10 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின் போது 2-வது இன்னிங்சில் 37 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. ரோரி பர்ன்ஸ் 10 ரன்னிலும், ஜென்னிங்ஸ் 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஜோ டென்லி 45 ரன்னுடனும், கேப்டன் ஜோரூட் 18 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 

மேலும் செய்திகள்