ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 199 ரன் இலக்கை சேசிங் செய்து ஐதராபாத் அணி முதல் வெற்றி சஞ்சு சாம்சன் சதம் வீண்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 199 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சனின் சதம் வீண் ஆனது.

Update: 2019-03-29 23:00 GMT
ஐதராபாத், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 199 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சனின் சதம் வீண் ஆனது.

ஐ.பி.எல். கிரிக்கெட்

8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மல்லுகட்டின. ஐதராபாத் அணியில் இரு மாற்றமாக ஷகிப் அல்-ஹசன், தீபக் ஹூடா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக காயத்தில் இருந்து தேறிய கேப்டன் கேன் வில்லியம்சன், ஷபாஸ் நதீம் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஜோஸ் பட்லரும், ரஹானேவும் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். ஐதராபாத் பவுலர்களின் தாக்குதலில் ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. ஜோஸ் பட்லர் 5 ரன்னில், ரஷித்கானின் சுழலில் கிளன் போல்டு ஆனார். அடுத்து சஞ்சு சாம்சன், ரஹானேவுடன் கைகோர்த்தார். மேலும் சில ஓவர்கள் இவர்கள் நிதானம் காட்டினர். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பிறகு ரன்வேகத்தை இருவரும் தீவிரப்படுத்தினர். நதீம், சித்தார்த் கவுல் ஓவர்களில் சாம்சன் சிக்சரை பறக்க விட்டார். ரஹானேவும் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டிற்கு விரட்டியடித்தார். 11.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை தொட்டது.

சாம்சன் சதம்

அணியின் ஸ்கோர் 134 ரன்களாக உயர்ந்த போது ரஹானே 70 ரன்களில் (49 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நுழைந்தார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் ஐதராபாத்தின் பந்து வீச்சை நொறுக்கியெடுத்தார். துணை கேப்டன் புவனேஷ்வர்குமாரின் ஒரே ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 24 ரன்கள் திரட்டி திகைப்பூட்டினார். சதத்தை நோக்கி முன்னேறிய அவர் கடைசி ஓவரில் பவுண்டரி விளாசி தனது 2-வது ஐ.பி.எல். சதத்தை எட்டினார்.

20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் அந்த அணி 76 ரன்கள் சேகரித்தது குறிப்பிடத்தக்கது. சஞ்சு சாம்சன் 102 ரன்களுடனும் (55 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களுடனும் (9 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் ரஷித்கான், ஷபாஸ் நதீம் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். முதல் 2 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்த புவனேஷ்வர்குமார் அடுத்த 2 ஓவர்களில் 45 ரன்களை வாரி வழங்கி நொந்து போனார்.

வார்னர் கலக்கல்

அடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்குடன் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் இறங்கினர். பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய வார்னர், ராஜஸ்தானின் பவுலர்களை ரணகளப்படுத்தினார். ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஓவர்களில் பவுண்டரிகளாக ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஸ்கோரும் மளமளவென எகிறியது. ரன்ரேட் 10 ரன்களுக்கு குறையாமல் நகர்ந்தது. இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் (9.4 ஓவர்) எடுத்த நிலையில் பிரிந்தனர். 38-வது அரைசதத்தை பூர்த்தி செய்த வார்னர் 69 ரன்களில் (37 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்த ஓவரில் பேர்ஸ்டோவும் (45 ரன், 28 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். பேர்ஸ்டோ சிக்சர் நோக்கி தூக்கிய பந்தை எல்லைக்கோடு அருகே தவால் குல்கர்னி தாவி குதித்து பிரமாதமாக கேட்ச் செய்தார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 14 ரன்னிலும், விஜய் சங்கர் 35 ரன்களிலும் (15 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), மனிஷ் பாண்டே ஒரு ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். ஆனாலும் ஐதராபாத் அணி சிரமமின்றி இலக்கை எட்டிப்பிடித்தது.

ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான் (15 ரன்), யூசுப் பதான் (16 ரன்) களத்தில் இருந்தனர். 2-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். ராஜஸ்தான் அணிக்கு 2-வது தோல்வியாகும்.

மேலும் செய்திகள்