‘அதிரடி மன்னன்’ ரஸ்செலின் பலம் என்ன?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை தோற்கடித்தது.

Update: 2019-04-06 22:23 GMT
பெங்களூரு,

இதில் கேப்டன் விராட் கோலி (84 ரன்), டிவில்லியர்ஸ் (63 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் பெங்களூரு அணி நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணிக்கு இறுதிகட்டத்தில் 4 ஓவர்களில் 66 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் பெங்களூரு அணியின் கை ஓங்குவது போல் தோன்றியது.

இந்த சூழலில் களம் புகுந்த ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல், பெங்களூரு பந்து வீச்சை பொளந்து கட்டினார். ஸ்டம்பை குறிவைத்து போட்டால் அடிக்கிறார் என்றால், வைடாக வீசிய பந்துகளையும் விட்டுவைக்கவில்லை. டிம் சவுதியின் ஒரே ஓவரில் மட்டும் ஒரு பவுண்டரி, 4 சிக்சர் பறந்தன. அவரது ருத்ரதாண்டவத்தால் கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் மலைப்பான இந்த இலக்கை எட்டிப்பிடித்தது. 48 ரன்கள் (13 பந்து, ஒரு பவுண்டரி, 7 சிக்சர்) விளாசிய ரஸ்செல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

களம் இறங்கி விட்டால் எதிரணியின் பந்து வீச்சை வறுத்தெடுக்கும் அசாத்திய திறமைசாலியான 30 வயதான ஆந்த்ரே ரஸ்செலிடம் (வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர்) உங்களது பலம் என்ன என்று கேட்ட போது, ‘நான் சிறப்பு உணவுகள் எதையும் சாப்பிடுவதில்லை. எல்லாமே மனசு சம்பந்தப்பட்ட விஷயம் தான். என் மனநிலை எப்போதும் சுதந்திரமாக இருக்கும்’ என்று பதில் அளித்தார்.

‘முடிந்த அளவுக்கு அதிக சிக்சர்கள் அடிக்க வேண்டும் என்ற மனநிலையுடன் பந்தை விளாசினேன். சிக்சர்கள் தான் ரன்ரேட் தேவையை குறைக்கும். களத்தில் நின்றால் எதுவும் சாத்தியமே என்ற நினைப்புடன் ஆடுவேன். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு ஓவர் கூட ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும். அதனால் நான் ஒரு போதும் நம்பிக்கையை இழப்பதில்லை’ என்றார். கொல்கத்தா அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான், ரஸ்செலை, பாகுபலியாக சித்தரித்து அந்த படத்தை டுவிட்டரில் வெளியிட்டு புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்