காயத்தால் அவதிப்படும் ரபடா தாயகம் திரும்ப உத்தரவு

காயத்தால் அவதிப்படும் ரபடா தாயகம் திரும்பும் உத்தரவால், அவர் எஞ்சிய ஐ.பி.எல். போட்டியில் ஆடமாட்டார்.

Update: 2019-05-03 23:10 GMT
புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த காஜிசோ ரபடா (தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்) 12 ஆட்டங்களில் விளையாடி 25 விக்கெட்டுகள் வீழ்த்தி ஊதா நிற தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். முதுகுவலி காரணமாக சென்னைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.

இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்குவதால் போதுமான ஓய்வு, பயிற்சி தேவை என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவரை உடனடியாக தாயகம் திரும்பும்படி தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் டெல்லி அணியின் கடைசி லீக் ஆட்டம் மற்றும் பிளே-ஆப் சுற்றில் அவர் ஆடமாட்டார். இது குறித்து 23 வயதான ரபடா கூறுகையில், ‘முக்கியமான கட்டத்தில் அணியை விட்டு செல்வது உண்மையிலேயே கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு மாத காலத்திற்குள் உலக கோப்பை போட்டி தொடங்குவதால், அதை கருத்தில் கொண்டு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. களத்திலும் சரி, வெளியிலும் சரி இந்த ஐ.பி.எல். சீசன் எனக்கு சிறப்பாக அமைந்தது. எங்களது அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றார்.

டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் கூறுகையில், ‘ரபடா இல்லாதது எங்கள் அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது இழப்பை ஈடுகட்ட எங்களிடம் டிரென்ட் பவுல்ட் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ரபடா இறுதிகட்டத்தில் அபாரமாக பந்து வீசினார். அதனால் இப்போது அந்த இடத்திற்கு சரியான பவுலரை அடையாளம் காண வேண்டி உள்ளது. டிரென்ட் பவுல்ட், கிறிஸ் மோரிஸ், இஷாந்த் ஷர்மா அல்லது யாராவது ஒரு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது’ என்றார்.

மேலும் செய்திகள்