ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து வெற்றியோடு விடைபெற்றார், மலிங்கா

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா, ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து வெற்றியோடு விடைபெற்றார்.

Update: 2019-07-26 23:57 GMT
கொழும்பு,

இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. குசல் பெரேரா சதம் (111 ரன், 99 பந்து, 17 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார்.

தொடர்ந்து மெகா இலக்கை நோக்கி களம் புகுந்த வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் தமிம் இக்பால் (0), சவும்யா சர்கார் (15 ரன்) இருவரும் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் தாக்குதலில் கிளன் போல்டு ஆனார்கள். சரிவில் இருந்து அணியை மீட்க முஷ்பிகுர் ரஹிம் (67 ரன்), சபீர் ரகுமான் (60 ரன்) போராடிய போதிலும் பலன் இல்லை. வங்காளதேச அணி 41.4 ஓவர்களில் 223 ரன்களுக்கு அடங்கியது. இதன் மூலம் இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை கண்டுள்ளது.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியோடு அவர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 35 வயதான மலிங்கா 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அவர் 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து ஆடுவார்.

மேலும் செய்திகள்