ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், மேத்யூ வேட் சதம் அடித்து அசத்தல்

ஆஷஸ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 398 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது. ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட் சதம் அடித்து அசத்தினர்.

Update: 2019-08-04 22:45 GMT

பர்மிங்காம், 

ஆஷஸ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 398 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது. ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட் சதம் அடித்து அசத்தினர்.

ஆஷஸ் கிரிக்கெட்

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 284 ரன்களும், இங்கிலாந்து 374 ரன்களும் எடுத்தன. 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் (46 ரன்), டிராவிஸ் ஹெட் (21 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கோலோச்சினர். எச்சரிக்கையுடன் ஆடிய சுமித்தும், ஹெட்டும் அணியை வலுவான நிலையை நோக்கி பயணிக்க வைத்தனர். அணியின் ஸ்கோர் 205 ரன்களாக உயர்ந்த போது, டிராவிஸ் ஹெட் (51 ரன்) பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார்.

சுமித், வேட் சதம்

அடுத்து ஸ்டீவன் சுமித்துடன், மேத்யூ வேட் கைகோர்த்தார். இந்த ஜோடியினரும் இங்கிலாந்தின் பந்து வீச்சை சிதறடித்தனர். இங்கிலாந்தின் முன்னணி பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை. இது இங்கிலாந்துக்கு பின்னடைவாக அமைந்தது.

தூண் போல் நிலை கொண்டு ஆடிய ஸ்டீவன் சுமித் உணவு இடைவேளைக்கு பிறகு பவுண்டரி அடித்து தனது 25-வது சதத்தை நிறைவு செய்தார். சுமித், முதல் இன்னிங்சிலும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஸ்டீவன் சுமித், புதிய பந்து எடுக்கப்பட்ட பிறகு விக்கெட்டை பறிகொடுத்தார். கிறிஸ் வோக்சின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் சிக்கிய ஸ்டீவன் சுமித் 142 ரன்களில் (207 பந்து, 14 பவுண்டரி) வெளியேறினார். மறுமுனையில் மேத்யூ வேட் தனது 3-வது சதத்தை பூர்த்தி செய்தார். மேத்யூ வேட் 110 ரன்களில் (143 பந்து, 17 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேப்டன் டிம் பெய்ன் 34 ரன்களில் வீழ்ந்தார்.

398 ரன் இலக்கு

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 112 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 487 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பேட்டின்சன் 47 ரன்களுடனும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), கம்மின்ஸ் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்துள்ளது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

ஸ்டீவன் சுமித் சாதனை

* முதல் இன்னிங்சில் 144 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 2-வது இன்னிங்சிலும் சதம் விளாசினார். ஆஷஸ் டெஸ்ட் ஒன்றில் இரண்டு இன்னிங்சிலும் சதம் கண்ட 5-வது ஆஸ்திரேலிய வீரர் சுமித் ஆவார். கடைசியாக 2002-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் இச்சாதனையை செய்திருந்தார்.

* இங்கிலாந்துக்கு எதிராக சுமித்தின் 10-வது செஞ்சுரி இதுவாகும். அந்த அணிக்கு எதிராக ஆஷஸ் தொடரில் அதிக சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர்களில் டான் பிராட்மேன் (19 சதம்), ஜாக் ஹோப்ஸ் (12 சதம்) ஆகியோருக்கு அடுத்துள்ள ஸ்டீவ் வாக்கை (10 சதம்) சுமித் சமன் செய்துள்ளார்.

* ஒட்டுமொத்தத்தில் ஸ்டீவன் சுமித்துக்கு இது 25-வது டெஸ்ட் சதமாகும். தனது 119-வது இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டிய ஸ்டீவன் சுமித் குறைந்த இன்னிங்சில் 25 சதங்கள் அடித்தவர்களின் வரிசையில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதில் பிராட்மேன் (68 இன்னிங்ஸ்) சாதனையாளராக தொடருகிறார். 3-வது இடத்தில் விராட் கோலியும் (127 இன்னிங்ஸ்), 4-வது இடத்தில் சச்சின் தெண்டுல்கரும் (130 இன்னிங்ஸ்) உள்ளனர்.

மேலும் செய்திகள்