20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை வீரர் மலிங்கா சாதனை

இலங்கை அணி வீரர் மலிங்கா 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

Update: 2019-09-02 13:06 GMT
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மலிங்கா தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் எதிர் அணி வீரர்களை திணறடிக்க செய்பவர். சமீபத்தில் மலிங்கா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து  ஓய்வு பெற்றார். தற்போது 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் கவனம் செலுத்தி விளையாடி வருகிறார்.

இந்நிலையில், நியூசிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில்  4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை (175 ரன்கள்) எட்டியது. இதன்மூலம்  இலங்கை  அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் மலிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை மலிங்கா பெற்றுள்ளார். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மலிங்கா 74  போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி 98 விக்கெட்டுகளுடன் இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

இதுமட்டுமல்லாது இன்னும் 1 விக்கெட் வீழ்த்தினால் மலிங்கா,  20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அடைவார்.

மேலும் செய்திகள்