வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்..? - ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்

இன்று மாலை நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

Update: 2024-04-28 00:33 GMT

Image Courtesy: @ChennaiIPL

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு அரங்கேறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியன் சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வி கண்டு 8 புள்ளி பெற்றுள்ளது. அதிரடியில் அசத்தி வரும் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது.

தங்களது சொந்த ஊரில் நடந்த சென்னைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. எனவே அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத்துக்கு எதிராக சென்னை அணி ஒருபோதும் தோற்றதில்லை.

சொந்த மண்ணில் அந்த அணிக்கு எதிரான 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. அந்த பெருமையை தக்கவைத்து கொள்ளவும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் சென்னை அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

முன்னதாக மாலை அகமதாபாத்தில் நடைபெறும் 45வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 9 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது.

பெங்களூரு அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொடரும் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அத்துடன் வாய்ப்பு முடிந்து போய்விடும். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

Tags:    

மேலும் செய்திகள்