வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் வீரர் ரமத் ஷா சதம் அடித்து சாதனை

சிட்டகாங்கில் நேற்று தொடங்கிய வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் வீரர் ரமத் ஷா சதம் அடித்து சாதனை படைத்தார்.

Update: 2019-09-06 00:13 GMT
சிட்டகாங்,

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் மற்றும் முத்தரப்பு 20 ஓவர் தொடரில் (3-வது அணி ஜிம்பாப்வே) பங்கேற்கிறது.

வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. உலக கோப்பைக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஷித்கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த வயதிலேயே அணியை வழிநடத்தியவர் என்ற சிறப்பை ரஷித்கான் பெற்றார். ரஷித்கானின் வயது 20 ஆண்டு 350 நாட்கள். இதற்கு முன்பு இளம் வயது கேப்டன் என்ற சாதனையை ஜிம்பாப்வேயின் தைபு (20 ஆண்டு 358 நாட்கள்) பெற்று இருந்தார்.

இந்த டெஸ்டில் ‘டாஸ்’ ஜெயித்த ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. 77 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த ஆப்கானிஸ்தான் அணியை ரமத் ஷாவும், அஸ்ஹார் ஆப்கனும் இணைந்து மீட்டனர்.

அபாரமாக ஆடிய 26 வயதான ரமத் ஷா பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது ‘கன்னி’ சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார். சதத்தை எட்டிய அடுத்த பந்திலேயே ரமத் ஷா (102 ரன், 187 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். இவர்கள் 4-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அடுத்து வந்த முகமது நபி ‘டக்-அவுட்’ ஆனார்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 96 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் சேர்த்துள்ளது. அஸ்ஹார் ஆப்கன் 88 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் அப்சர் ஜஜாய் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேச அணி 6 சுழற்பந்து வீச்சாளர் உள்பட 8 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வங்காளதேச இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 2 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவரது விக்கெட் எண்ணிக்கை 101 ஆக (25 டெஸ்ட்) உயர்ந்தது. டெஸ்டில் 100 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய வங்காளதேச பவுலர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

மேலும் செய்திகள்