தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய வீரர்கள் தர்மசாலா சென்றனர்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் தர்மசாலா சென்றனர்.

Update: 2019-09-14 00:24 GMT
தர்மசாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இங்கு அடிக்கடி மழை பெய்வதால் இந்த ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது.முதலாவது 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று தர்மசாலாவுக்கு சென்றடைந்தது. இந்திய வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

இந்த மைதானத்தில் இதுவரை எட்டு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்தியா ஆடிய ஆட்டம் ஒன்று தான். 2015-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி 199 ரன்கள் குவித்த போதிலும் தோல்வி அடைந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்