இலங்கை வீரர் தனஞ்ஜெயா பந்து வீச ஓராண்டு தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தனஞ்ஜெயா பந்து வீச ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-19 21:57 GMT
துபாய்,

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா. கடந்த மாதம் காலேயில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இவரது பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) புகார் அளித்தனர். இலங்கை அணி வெற்றி பெற்ற அந்த டெஸ்டில் தனஞ்ஜெயா முதலாவது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

ஏற்கனவே தனஞ்ஜெயா கடந்த டிசம்பர் மாதமும் இதே பிரச்சினையில் சிக்கினார். அவரது பந்து வீச்சை சோதனைக்கு உட்படுத்திய போது, பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு பவுலர் இரண்டு ஆண்டுக்குள் 2-வது முறையாக இத்தகைய சர்ச்சையில் மாட்டிக் கொண்டால் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஓராண்டு பந்து வீச தடை விதிக்க முடியும். இதன் அடிப்படையில் அகிலா தனஞ்ஜெயாவுக்கு ஓராண்டு பந்து வீச தடை விதிப்பதாக ஐ.சி.சி. நேற்று அறிவித்தது.

மேலும் செய்திகள்