20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடக்க வேண்டும் - கவாஸ்கர் யோசனை

ஆஸ்திரேலியாவுக்கு பதிலாக இந்த ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடக்க வேண்டும் என்று கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-21 23:00 GMT
புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

‘கொரோனா அச்சம் காரணமாக செப்டம்பர் 30-ந்தேதி வரை தங்கள் நாட்டில் வெளிநாட்டினர் நுழைய ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து இருக்கிறது. அக்டோபர் 18-ந்தேதி 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில் அது கடினம் என்றே தோன்றுகிறது. அதே சமயம் அடுத்த ஆண்டு (2021) இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டால், அத்துடன் இந்தியாவில் கொரோனா தாக்கம் சீரடையும் பட்சத்தில் இவ்விரு உலக கோப்பை போட்டிகளையும் மாற்றிக் கொள்ளலாம்.

அதாவது இந்த ஆண்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 20 ஓவர் உலக போட்டி இந்தியாவிலும், அடுத்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட வேண்டும். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், உலக கோப்பை போட்டிக்கு முன்பாக அதாவது செப்டம்பர் மாதம் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டியை நடத்தவும் வாய்ப்பு உண்டு. இது உலக கோப்பை போட்டிக்கு வீரர்களுக்கு போதுமான பயிற்சியாக அமையும். இந்த சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க வேண்டிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை டிசம்பர் மாதத்தில் நடத்திக் கொள்ளலாம்’. இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

மேலும் செய்திகள்