தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை 157 ரன்னில் சுருண்டது

தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது.

Update: 2021-01-03 21:45 GMT
ஜோகன்னஸ்பர்க்,

டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் கருணாரத்னே 2 ரன்னில் கேட்ச் ஆனார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 71 ரன்களுடன் ஓரளவு நல்ல நிலைமையில் இருந்த இலங்கை அணி பின்னர் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து திண்டாடியது. குசல் பெரேரா (60 ரன், 67 பந்து, 11 பவுண்டரி) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 40.3 ஓவர்களில் 157 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் அன்ரிச் நோர்டியா 6 விக்கெட்டுகளும், வியான் முல்டர் 3 விக்கெட்டுகளும் அள்ளினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் (92 ரன்), வான்டெர் துஸ்சென் (40 ரன்) களத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்