பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி 659 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ - வில்லியம்சன் இரட்டை சதம் அடித்து அசத்தல்

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 659 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்தார்.

Update: 2021-01-05 23:16 GMT
கிறைஸ்ட்சர்ச், 

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 297 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 112 ரன்னுடனும், ஹென்றி நிகோல்ஸ் 89 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்றும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் முழுமையாக கோலோச்சினர். 7-வது சதத்தை எட்டிய நிகோல்ஸ் 157 ரன்களில் (291 பந்து, 18 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு வில்லியம்சன்-நிகோல்ஸ் இணை 369 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.

அடுத்து களம் கண்ட வாட்லிங் 7 ரன்னில் வீழ்ந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய வில்லியம்சன் 4-வது இரட்டை சதத்தை ருசித்தார். வில்லியம்சன் 238 ரன்களில் (364 பந்து, 28 பவுண்டரி) கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து கைல் ஜாமிசன், டாரில் மிட்செலுடன் கைகோர்த்தார். இருவரும் பாகிஸ்தான் பந்து வீச்சை ெநாறுக்கித் தள்ளி ரன்மழை பொழிந்தனர். டாரில் மிட்செல் ‘கன்னி’ சதத்தை அடைந்ததும் நியூசிலாந்து இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இதன்படி நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 158.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இந்த மைதானத்தில் ஒரு அணி 600 ரன்களை கடந்தது இதுவே முதல் நிகழ்வாகும். டாரில் மிட்செல் 112 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 102 ரன்னும், ஜாமிசன் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன்னும் விளாசி களத்தில் நின்றனர்.

பாகிஸ்தான் அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. அந்த அணியினர் வில்லியம்சன், நிகோல்ஸ், மிட்செல், ஜாமிசன் ஆகியோர் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டனர்.

பின்னர் 362 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி நேற்றைய முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 8 ரன் எடுத்துள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த ெடஸ்டில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புள்ளது.

7 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்தார், வில்லியம்சன்

* 4-வது விக்கெட்டுக்கு வில்லியம்சன்-ஹென்றி நிகோல்ஸ் ஜோடி 369 ரன்கள் திரட்டியது. பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு விக்கெட்டுக்கு நியூசிலாந்து இணை சேர்த்த அதிகபட்ச ரன் இதுவாகும். அத்துடன் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் 3-வது பெரிய பார்ட்னர்ஷிப்பாகவும் இது பதிவானது.

* டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் நேற்று 4-வது இரட்டை சதத்தை அடித்தார். இதன் மூலம் டெஸ்டில் அதிக இரட்டை சதம் (4) அடித்த நியூசிலாந்துக்காரர் என்ற பெருமையை பிரன்டன் மெக்கல்லத்துடன் இணைந்து பெற்றுள்ளார்.

* 238 ரன்கள் குவித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 123 ரன்னை தொட்ட போது 7 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பை தனதாக்கினார். 83-வது டெஸ்டில் ஆடும் அவர் இதுவரை 7,115 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர்களில் ராஸ் டெய்லர் 96 டெஸ்டுகளில் 7 ஆயிரம் ரன்களை கடந்ததே அதிவேகமாக இருந்தது.

மேலும் செய்திகள்