டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 3-வது இடத்துக்கு முன்னேற்றம் கோலி மீண்டும் சரிவு

டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Update: 2021-02-10 23:22 GMT
துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில், சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இரட்டை சதம் விளாசி வெற்றிக்கு வித்திட்ட இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 5-ல் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அபார பேட்டிங்கால் 60 புள்ளிகளை கூடுதலாக சேகரித்த அவர் மொத்தம் 883 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறார். இதனால் 4-வது இடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி மேலும் ஒரு இடம் இறங்கி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜோ ரூட் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு முதல் முறையாக கோலியை முந்தியிருக்கிறார்.

சென்னை டெஸ்டில் இரு இன்னிங்சிலும் (1, 0) சொதப்பிய இந்திய துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 3 இடங்கள் சரிந்து 11-வது இடத்துக்கு பின்தங்கினார். இதே டெஸ்டில் முதல் இன்னிங்சில் 91 ரன்கள் நொறுக்கிய இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் தரவரிசையில் மாற்றமின்றி 13-வது இடத்தில் நீடிக்கிறார். இருப்பினும் 12 புள்ளிகளை கூடுதலாக பெற்று மொத்தம் 703 புள்ளிகளை எட்டியிருக்கிறார். இந்திய முழு நேர விக்கெட் கீப்பர் ஒருவர் 700 புள்ளிகளை கடப்பது இதுவே முதல் முறையாகும். மற்ற இந்திய வீரர்கள் புஜாரா 7-வது இடத்திலும் (ஒரு இடம் சரிவு), ரோகித் சர்மா 23-வது இடத்திலும் (5 இடம் குறைவு), சுப்மான் கில் 40-வது இடத்திலும் (7 இடம் உயர்வு), வாஷிங்டன் சந்தர் 81-வது இடத்திலும் (2 இடம் ஏற்றம்) உள்ளனர்.

அறிமுக வீரரின் சாதனை

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுக வீரராக இறங்கி இரட்டை சதம் (210 ரன்) அடித்ததோடு 395 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வரலாறு படைக்க உதவிய வெஸ்ட் இண்டீஸ் புதுமுக வீரர் கைல் மேயர்ஸ் 448 புள்ளிகளுடன் தரவரிசையில் 70-வது இடத்துக்கு நுழைந்திருக்கிறார். தரவரிசையின் அறிமுகத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் வீரர் பெற்ற அதிகபட்ச புள்ளி எண்ணிக்கை இதுவாகும்.

இதே போல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 19 இடங்கள் உயர்ந்து தனது சிறந்த நிலையாக 16-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லி 46-ல் இருந்து 35-வது இடத்துக்கு வந்துள்ளார்.

ஆண்டர்சன்-அஸ்வின் முன்னேற்றம்

டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் நம்பர் ஒன் இடத்தில் தொடருகிறார். சென்னை டெஸ்டில் 2-வது இன்னிங்சில் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஜாலத்தில் இந்தியாவின் 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து மிரள வைத்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6-ல் இருந்து 3-வது இடத்தை எட்டியுள்ளார். இந்த டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ஒரு இடம் உயர்ந்து 7-வது இடத்தை பெற்றுள்ளார். பும்ரா ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தில் இருக்கிறார்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்), ரவீந்திர ஜடேஜா (இந்தியா) ஆகியோர் உள்ளனர். 

மேலும் செய்திகள்