டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி: டிவில்லியர்சுக்கு விராட்கோலி புகழாரம்

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடிய டிவில்லியர்சுக்கு பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி புகழாரம் சூட்டினார்.

Update: 2021-04-29 01:01 GMT
ஆமதாபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 5-வது வெற்றியை தனதாக்கியது. முதலில் ஆடிய பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பின்னர் ஆடிய டெல்லி அணி 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து மயிரிழையில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது. ரிஷாப் பண்ட் (58 ரன்), ஹெட்மயர் (53ரன்) அரைசதம் அடித்தும் பலன் இல்லை. பெங்களூரு வீரர் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி கூறுகையில், ‘ஒரு கட்டத்தில் ஆட்டம் எங்கள் கையை விட்டு போய் விட்டதாகவே கருதினேன். ஆனால் முகமது சிராஜ் கடைசி ஓவரை தொடங்கிய விதம் எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. முடிவில் அவர் வெற்றிகரமாக போட்டியை நிறைவு செய்தார். நாங்கள் இன்னும் வித்தியாசமாக செயல்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். பீல்டிங்கில் ஒன்றிரண்டு தவறுகளை இழைத்தோம். மேக்ஸ்வெல், ரஜத் படிதர், டிவில்லியர்ஸ் சிறப்பான இன்னிங்ஸ் ஆடினார்கள். எங்களது பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால் இந்த ஆட்டத்தில் நாங்கள் பெரும்பாலான கட்டங்களில் உயர்ந்த நிலையில் இருந்ததாக நினைக்கிறேன். இந்த ஆடுகளத்தில் 160-165 ரன்களே போதுமான ஸ்கோர் என்று நாங்கள் நம்பினோம். இரவில் பனியின் தாக்கம் எதுவுமில்லை. ஆட்டத்தின் இடையில் வீசிய மணல் சூறாவளியால் ஆடுகளத்தில் ஈரப்பதம் இல்லாமல் போனது சாதகமான விஷயமாகும். எங்களது பந்து வீச்சு வரிசையை பார்த்தால் நாங்கள் இன்னும் மேக்ஸ்வெல்லுக்கு பந்து வீசும் வாய்ப்பு வழங்கவில்லை. மேக்ஸ்வெல்லை தேவைப்பட்டால் 7-வது பந்து வீச்சாளராக பயன்படுத்தலாம். ஒரு கேப்டனாக நான் சூழ்நிலைக்கு தகுந்தபடி பந்து வீச்சாளர்களை மாற்றி பயன்படுத்த முடியும். இதன் மூலம் மற்றொரு பவுலரின் பணிச்சுமையை குறைக்க முடியும். நாங்கள் எப்பொழுதும் பேட்டிங்கில் வலுவாக இருப்போம். தற்போது பந்து வீச்சிலும் வலுவாக மாறிவிட்டோம். கேப்டனாக இருக்கையில் நிறைய அழுத்தம் இருக்க தான் செய்யும். தொடர்ந்து அந்த பணியை செய்கையில் அதனை சமாளிக்க தான் வேண்டும். கடந்த 5 மாதங்களில் எந்த போட்டியிலும் விளையாடாவிட்டாலும் டிவில்லியர்ஸ் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எல்லா பாராட்டுகளும் அவரையே சாரும். அவரது ஆட்டத்தை பார்க்கையில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாகவே எனக்கு தோன்றவில்லை ’ என்றார்.

மேலும் செய்திகள்