3வது ஒருநாள் போட்டி; ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய அயர்லாந்து..!
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணி கைப்பற்றியது.;
Image Courtesy: @ICC
ஹராரே,
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் அயர்லாந்து அணி கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் முடிவில் 1-0 என அயர்லாந்து அணி முன்னிலையில் இருந்தது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 40 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து டிஎல்எஸ் முறையில் 40 ஓவர்களில் 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து அணி 37.5 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 204 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணி கைப்பற்றியது.