பகல் - இரவு டெஸ்ட்: வரலாறு படைத்த மார்னஸ் லபுஸ்சேன்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஆஷஸ் டெஸ்டில் லபுஸ்சேன் 65 ரன்கள் அடித்தார்.;
image courtesy:PTI
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 76.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 334 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 138 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் அடித்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 41 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். டிராவிஸ் ஹெட் 33 ரன்களிலும், ஜேக் வெதரால்ட் 72 ரன்களிலும், மார்னஸ் லபுஸ்சேன் 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்த இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் 46 ரன்கள் அடித்திருந்தபோது பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் அவருக்கு அடுத்து ஸ்டீவ் ஸ்மித் 800+ ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.