50+ சதங்கள் அடித்தும் விராட் கோலி வெறித்தனமாக கொண்டாடுவது ஏன்..? அஸ்வின் விளக்கம்
ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 53 சதங்கள் அடித்துள்ளார்.;
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுள்ள 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரரான விராட் கோலி சதமடித்து அசத்தியுள்ளார். இதனையும் சேர்த்து விராட் கோலி இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 53 சதங்கள் அடித்துள்ளார்.
அப்படிப்பட்ட அவர் சதம் அடித்தால் அதனை முதல் சதம் அடிக்கும்போது எப்படி கொண்டாடினாரோ அதேபோலவே துள்ளி குதித்து வெறித்தனமாக கொண்டாடி வருகிறார். இருப்பினும் இந்த தொடருக்கு முந்தைய சில வருடங்களில் சதம் அடிப்பதை சாதாரணமாகவே கொண்டாடினார்.
ஆனால் இந்த தொடரில் சதமடித்த 2 நிகழ்வுகளிலும் துள்ளி குதித்து வெறித்தனமாக கொண்டாடினார். இது பலரது மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய திறமை குறித்து சந்தேகப்படுவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விராட் கோலி இப்படி கொண்டாடுவதாக இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “விராட் ஏன் அப்படி கொண்டாடுகிறார்? அவர் என்ன நினைக்கிறார், என்ன அனுபவித்தார்? விராட் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு வெளியேறினார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இரண்டு நிகழ்வுகளும் மிகவும் ஒத்திசைவாக உணர்ந்தன. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் நேசித்தார். எப்போதும் டெஸ்டில் விளையாட விரும்பினார்.
ஆனால் அவர் அதிலிருந்து ஓய்வு பெற்றார். ஏனெனில் அவரைச் சுற்றி உரையாடல்களும், டெஸ்ட் போட்டிகளில் அவர் ரன்கள் எடுக்காதது குறித்த கேள்விகளும் இருந்தன. எவ்வாறாயினும் ஓய்வு பெறுவது ஒரு முக்கிய முடிவு. தற்போது அவர் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்
மக்கள் தனது திறமையை சந்தேகிக்கிறார்களா? என்று விராட் கோலி சிந்தித்து கொண்டிருப்பார். தனது திறமை என்பதை அனைவருக்கும் காட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்த அவர் இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். சில சமயங்களில் நீங்கள் வலுக்கட்டாயமாக உங்களை நிரூபிக்க முயற்சிக்கும் போது அது நடக்காமல் போகலாம்.
ஒருவேளை கடந்த காலத்தில் விராட்டுக்கு அது நடந்திருக்கலாம். ஆனால் தற்போது என்னையா சந்தேகத்தீர்கள்? என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறேன் என்ற வகையில் விளையாடுகிறார். அவர் ஒரு நல்ல மனநிலையில் இருக்கிறார்” என்று கூறினார்.