ஆஷஸ் 2-வது டெஸ்ட்: அபார பேட்டிங்.. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 77 ரன்கள் அடித்தார்.;

Update:2025-12-06 14:17 IST

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 76.2 ஓவர்களில் 334 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜோ ரூட் 138 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை டிராவிஸ் ஹெட்டும், ஜேக் வெதரால்டும் தொடங்கினர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் (13.1 ஓவர்) எடுத்த நிலையில் பிரிந்தனர். ஹெட் 33 ரன்னில் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய லபுஸ்சேன் நிலைத்து ஆடினார். மறுமுனையில் தனது முதலாவது அரைசதத்தை கடந்த வெதரால்டு 72 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களம் புகுந்தார். தனது பங்குக்கு 65 ரன்கள் அடித்த லபுஸ்சேன் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித்துடன், கேமரூன் கிரீன் கூட்டணி போட்டார். இருவரும் சிறப்பாக ஆடி அணியை வலுவான நிலையை நோக்கி பயணிக்க வைத்தனர்.

அணியின் ஸ்கோர் 291 ரன்ளை எட்டிய போது, கேமரூன் கிரீன் (45 ரன்) கிளீன் போல்டானார். அதே ஓவரில் ஸ்மித்தும் (61 ரன்) சிக்கினார். இருவரின் விக்கெட்டையும் பிரைடன் கார்ஸ் காலி செய்தார். அடுத்து வந்த ஜோஷ் இங்லிஸ் 23 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் போல்டானார்.

2-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 73 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 378 ரன்கள் குவித்து, 44 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அலெக்ஸ் கேரி 46 ரன்களுடனும், மைக்கேல் நேசர் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.

இந்த சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மைக்கேல் நெசர் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஸ்டார்க், அலெக்ஸ் கேரியுடன் ஜோடி சேர்ந்து அணியை வலுவான முன்னிலையை நோக்கி பயணிக்க வைத்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து அசத்திய கேரி 63 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதி கட்ட வீரர்க்ளின் கணிசமான ஒத்துழைப்புடன் அரைசதம் அடித்து அசத்திய ஸ்டார்க், ஆஸ்திரேலிய அணி 500 ரன்களை எட்ட உதவினார். பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் கலக்கிய ஸ்டார்க் 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் இன்னிங்சில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 117.3 ஓவர்களில் 511 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணியை விட 177 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகளும், ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 177 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்