முதல் டெஸ்ட்: ஜஸ்டின் கிரீவ்ஸ் இரட்டை சதம்.. போராடி டிரா செய்த வெஸ்ட் இண்டீஸ்

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது.;

Update:2025-12-06 14:49 IST

கிறைஸ்ட்சர்ச்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 231 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்னும் எடுத்தன.

64 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 466 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 531 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 176 ரன்களும், டாம் லதாம் 145 ரன்களும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான் கேம்ப்பெல் (15 ரன்), தேஜ்நரின் சந்தர்பால் (6 ரன்), அலிக் அதானேஸ் (5 ரன்), கேப்டன் ரோஸ்டன் சேஸ் (4 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அந்த அணி 72 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திண்டாடியது.

இந்த இக்கட்டான சூழலில் ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷாய் ஹோப்புடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஷாய் ஹோப் 139 பந்துகளில் தனது 4-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

4-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 74 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் அடித்திருந்தது. ஷாய் ஹோப் 116 ரன்களுடனும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 55 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 319 ரன் தேவை என்ற நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

தொடர்ந்து ஆடிய ஷாய் ஹோப் - ஜஸ்டின் கிரீவ்ஸ் கூட்டணி அணியின் ரன் எண்ணிக்கை 268 ரன்கள் எட்டிய நிலையில் பிரிந்தது. ஷாய் ஹோப் 140 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப் - ஜஸ்டின் கிரீவ்ஸ் கூட்டணி 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த டெவின் இம்லாச் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஜஸ்டின் கிரீவ்ஸ் உடன் கெமர் ரோச் ஜோடி சேர்ந்தார். டிரா செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆடிய இந்த ஜோடி முழுக்க முழுக்க தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது. கெமர் ரோச்சின் ஒத்துழைப்புடன் ஜஸ்டின் கிரீவ்ஸ் இரட்டை சதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கெமர் ரோச் அரைசதம் அடித்தார். டிரா செய்ய போராடிய இந்த ஜோடியின் முயற்சி கடைசியில் நிறைவேறியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 163.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 457 ரன்கள் அடித்திருந்தபோது ஆட்டம் டிராவில் முடிவில் முடித்து கொள்ளப்பட்டது. ஜஸ்டின் கிரீவ்ஸ் 202 ரன்களுடனும், கெமர் ரோச் 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்