உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணிக்காக அதிவேக சதம்..! சாதனை படைத்த குசால் மெண்டிஸ்

குசால் மெண்டிஸ் இலங்கை அணிக்காக அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Update: 2023-10-10 13:07 GMT

ஐதராபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களம் இறங்கினர். இதில் பெரேரா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.இதையடுத்து நிசாங்காவுடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. அதிரடியாக ஆடிய நிசாங்கா 51 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து மெண்டிஸ் உடன் சமரவிக்ரமா ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெண்டிஸ் 77 பந்தில் 122 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.இதையடுத்து களம் இறங்கிய அசலங்கா 1 ரன், டி சில்வா 25 ரன், தசுன் ஷனகா 12 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சமரவிக்ரமா சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது.

இப்போட்டியில் குசால் மெண்டிஸ் இலங்கை அணிக்காக அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் 65 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். முன்னதாக, இலங்கை அணியின் குமார் சங்ககாரா 70 பந்துகளில் சதம் விளாசியதே உலகக் கோப்பைப் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது

,

Tags:    

மேலும் செய்திகள்