விஜய் ஹசாரே கோப்பை: தமிழக அணி தோல்வி
நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) தமிழக அணி, மத்தியபிரதேசத்தை எதிர்கொண்டது;
மும்பை,
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) தமிழக அணி, மத்தியபிரதேசத்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த தமிழகம் 49.3 ஓவர்களில் 280 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. சாய் சுதர்சன் (51 ரன்), கேப்டன் ஜெகதீசன் (55 ரன்), முகமது அலி (57 ரன்) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய மத்திய பிரதேச அணி 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
யாஷ் துபே (92 ரன்), ஹிமான்ஷூ மந்திரி (90 ரன்) வெற்றிக்கு வித்திட்டனர். 2-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். தமிழக அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 29-ந்தேதி கர்நாடகாவுடன் மோதுகிறது.