இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி
மெல்போர்ன் டெஸ்டின் 2-வது நாளிலும் விக்கெட்டுகள் மளமளவென விழுகின்றன.;
மெல்போர்ன்,
பாக்சிங் டே டெஸ்ட்
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்தின் ஜோஷ் டங், அட்கின்சனின் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தது . ஹெட் 12 ரன்னிலும், வெதரால்ட் 10 ரன்னிலும், லபுஸ்சேன் 6 ரன்னிலும், சுமித் 9 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா 45.2 ஓவர்களில் 152 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார். அட்கின்சன் 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், கார்சே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்
இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. தொடக்கம் முதல் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் தடுமாறினர். ஆஸ்திரேலிய அணியின் மிரட்டல் பந்துவீச்சில் இங்கிலாந்து அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணியில் ஹாரி புரூக் மட்டும் சிறப்பாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இறுதியில் 110 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியில் நெசர் 4 விக்கெட், போலந்த் 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 42 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்து இருந்தது.
இதனை தொடர்ந்து இன்று 2-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இன்றும், ஆஸ்திரேலிய அணியினர், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அணியில் டிராவிஸ் ஹெட், ஸ்மித், கிரீன் ஆகிய மூவரை தவிற, மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 34.3 ஓவர்களில் 132 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 46 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கார்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இங்கிலாந்து வெற்றி
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கிராலியும், பென் டக்கெட்டும் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த தொடக்கத்தை பயன்படுத்தி, மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலக்கை விரைவில் விரட்டிப்பிடிக்கும் நோக்கில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் செயல்பட்டனர். இறுதியில் இங்கிலாந்து அணி 32.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பெத்தேல் 40 ரன்கள் எடுத்தார். நடப்பு தொடரில் முதல் வெற்றியை இங்கிலாந்து அணி பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 3-1 என்ற நிலையில் உள்ளது. 5 நாட்களை கொண்ட டெஸ்ட் கிரிக்கெட், இரண்டே நாளில் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டே நாளில் ஆட்டம் முடிவுக்கு வந்ததற்கான காரணம் என்ன?
மெல்போர்ன் மைதானத்தில் விக்கெட் பிட்சில் வழக்கைத்தை விட அதிகமாக புற்கள் (10 மில்லிமீட்டர்) உள்ளது. இதன் காரணமாக பந்து தாறுமாறாக திரும்புவதால், பந்தை கணித்து விளையாடுவதில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சிரமம் அடைந்துள்ளனர். பிட்ச் பராமரிப்பாளரை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். முற்றிலும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான வகையில் பிட்ச் அமைக்கப்பட்டு இருப்பதால், இது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் இல்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.