ஐபிஎல் 2023: பாதி தொடரை தவறவிடும் ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் - காரணம் என்ன...?

16வது ஐபிஎல் சீசன் தொடர் அகமதாபாத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

Update: 2023-03-31 10:50 GMT

Image Courtesy: royalchallengersbangalore

அகமதாபாத்,

16வது ஐபிஎல் சீசன் தொடர் அகமதாபாத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை -குஜராத் அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் பெங்களூரு அணியை பாப் டூ பிளஸ்சிஸ் வழி நடத்துகிறார். பெங்களூரு அணியில் விராட், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், முகமது சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளனர். இதுவரை 3 முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் களம் கண்டுள்ள பெங்களூரு அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்ட பெங்களூரு அணியினர் தீவிரமாக முயற்சிப்பர்.

இந்நிலையில், பெங்களூரு அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோஸ் ஹேசில்வுட் முதல் 7 ஆட்டங்களில் ஆட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய இன்னும் சிறிது காலம் ஆகும் என்பதால் அவர் ஆர்சிபி அணிக்காக முதல் 7 ஆட்டங்களில் ஆட மாட்டார் என தெரிகிறது.

கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த ஹேசில்வுட் காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்