என் அம்மா மருத்துவமனையில் உள்ளார் ஆனால் இந்த காரணத்திற்காக ஐ.பி.எல் விளையாட வந்தேன் - ரஹ்மனுல்லா குர்பாஸ்

கொல்கத்தா அணியும் என்னுடைய குடும்பத்தை போன்றது என ரஹ்மனுல்லா குர்பாஸ் கூறியுள்ளார்.

Update: 2024-05-22 10:58 GMT

Image Courtesy: AFP

அகமதாபாத்,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதிசுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி கொல்கத்தாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஐதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 159 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஐதராபாத் தரப்பில் ராகுல் திரிபாதி 55 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட், சக்கரவர்த்தி 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 164 ரன் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கொல்கத்தா தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன், வெங்கடேஷ் ஐயர் 51 ரன் எடுத்தனர்.

இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது முதல் ஆட்டத்தை நேற்று ஆடினார். அவர் இந்த ஆட்டத்தில் 14 பந்துகளில் 23 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். லீக் சுற்று ஆட்டங்களில் குர்பாஸின் இடத்தில் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் அற்புதமாக விளையாடினார்.

டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு பில் சால்ட் தாயகம் திரும்பிய நிலையில் குர்பாஸூக்கு ஆடும் லெவனில் நேற்று வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் ரஹ்மனுல்லா குர்பாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, என்னுடைய அம்மாவுக்கு இன்னும் உடல்நிலை சரியாகவில்லை. அதனால் நான் ஆப்கானிஸ்தானுக்கு சென்றேன்.

பில் சால்ட் அணியிலிருந்து வெளியேறியதால் கொல்கத்தா அணிக்கு நான் தேவை என்பது எனக்கு தெரியும். அதனால் நான் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பி வந்தேன், இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய அம்மா இன்னும் மருத்துவமனையில் குணமாகி வருகிறார். அவரிடம் நான் தினமும் பேசி வருகிறேன்.கொல்கத்தா அணியும் என்னுடைய குடும்பத்தை போன்றது.

ஆனால் ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கு வந்து விளையாடுவது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. இருப்பினும் நான் அதை சமாளிக்கிறேன். ஐ.பி.எல் போன்ற லீக் தொடர்களில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும். எனவே உங்களுக்கு அதில் வாய்ப்பு கிடைத்தால் அதை பயன்படுத்தி விளையாடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்