மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பும் பிரித்வி ஷா

பிரித்வி ஷா அறிமுகம் ஆன முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் அசர வைத்தார்.

Update: 2024-02-01 10:50 GMT

மும்பை,

இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை வழிநடத்தி ஐ.சி.சி கோப்பையை வென்று கொடுத்தவர். அதன் காரணமாக வெகு விரைவிலேயே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

அறிமுகம் ஆன முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் அசர வைத்தார். இதன் காரணமாக பெரிய வீரராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்த அவர் தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்க போராடி வருகிறார்.

இதனிடையே இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள் கோப்பை என்ற உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட்டில் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக இந்திய வீரர் பிரித்வி ஷா அறிமுகம் ஆனார். ஆனால் அவரால் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. அவர் விளையாடிய 4 போட்டிகளில் 429 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் 153 பந்துகளில் 244 ரன்கள் அடித்ததும் அடங்கும். அதன்பின் முழங்காலில் எற்பட்ட காயம் காரணமாக அந்த சீசனிலிருந்து விலகினார்.

காயத்திற்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த அவர், தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் கிரிக்கெட்டில் மீண்டும் தடம் பதிக்க உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்