அம்மா கூறிய அந்த வார்த்தைகள்தான் வெற்றிக்கு காரணம் - கம்மின்ஸ் உருக்கம்

கேப்டனாக தம்முடைய வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு தன்னுடைய அம்மா கூறிய வார்த்தைகளே முக்கிய காரணம் என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-26 04:02 GMT

image courtesy: PTI

சென்னை,

நடப்பு ஐ.பி.எல். தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. முன்னதாக கடந்த வருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த ஐதராபாத் இம்முறை பைனலுக்கு தகுதி பெற கேப்டன் பேட் கம்மின்ஸ் முக்கிய காரணமாக திகழ்கிறார். வேகப்பந்து வீச்சாளரான அவர் கேப்டனாக அசத்தி வருகிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கி வரும் அவர், கடந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை நாட்டிற்கு வென்று கொடுத்தார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 ஆஷஸ் கோப்பையை அவருடைய தலைமையில் தக்க வைத்து ஆஸ்திரேலியா அசத்தியது. மேலும் நடப்பு ஐ.பி.எல். சீசனில் தம்மை நம்பி வாங்கிய ஐதராபாத் அணியை தற்போது கேப்டனாக அவர் தலைமையேற்ற முதல் சீசனிலேயே பைனலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கேப்டனாக இப்படி தம்முடைய வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு தன்னுடைய அம்மா கூறிய வார்த்தைகளே முக்கிய காரணம் என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த 2023 பார்டர் - கவாஸ்கர் கோப்பையின்போது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் இந்தியாவிலிருந்து வெளியேறினார். அப்போதுதான் தம்முடைய அம்மா அந்த வார்த்தைகளே சொன்னதாக கம்மின்ஸ் கூறியுள்ளார். ஆனால் அதன் பின் அம்மா இயற்கையை எய்தியது தமது வாழ்நாளின் கடினமான நாட்கள் என்றும் கமின்ஸ் உருக்கமாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியுள்ளது பின்வருமாறு:-"என்னுடைய அம்மா என்னிடம், 'பேட், நீ சென்று இந்த உலகத்தை எடுத்துக்கொள். எப்படியாக இருந்தாலும் இந்த உலகத்தில் யாராவது ஒருவர் சென்று இந்த அற்புதமான விஷயங்களை செய்யப் போகிறார்கள். அது ஏன் நீயாக இருக்கக் கூடாது? அது நீயாகவும் இருக்கலாம்' என்று என்னிடம் சொன்னார்.

இந்தியாவிலிருந்து சென்றபோது நான் மீண்டும் சில வாரங்களில் வருவேன் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அதுவே என்னுடைய வாழ்நாளில் மிகவும் கடினமான நேரமாகும். 12 மாதங்கள் வரை நான் அதை உணர்ந்திருக்கலாம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்