உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இந்த இளம் வீரரை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் - சவுரவ் கங்குலி

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இந்த இளம் வீரரை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என சவுரவ் கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-18 16:10 GMT

Image Courtesy : ICC / Twitter

புதுடெல்லி,

இந்தியாவில் வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது.

உலகக்கோப்பை தொடர் நடைபெறும் சமயத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளும் நடைபெற உள்ளன. உலகக்கோப்பை தொடரில் ரோகித், கோலி, கி, ராகுல், சிராஜ் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் விளையாடுவார்கள் என்பதால் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த அணியில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, ரிங்கு சிங், திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா, ப்ரப்சிம்ரன் சிங் உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஐபிஎல்-லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்ததுடன் முதல் ஆட்டத்திலேயே 171 ரன்கள் குவித்து மேன் ஆப் தி மேட்ச் விருதையும் பெற்றார்.

இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது ,

வரும் உலக கோப்பை தொடரும் ஜெய்ஸ்வால் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவரை நான் மிகவும் அருகிலிருந்து பார்த்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.

அதனால் அவர் இந்தியாவுக்கு நீண்ட காலம் விளையாடுவதற்கு தேவையான தரத்தைக் கொண்டுள்ளார் என நான் கருதுகிறேன். டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதற்கு நான் சாதகமாக இருப்பேன்.

ஏனெனில் அது எதிரணி பவுலர்கள் அடிக்கடி தங்களது லென்த்தை வலுக்கட்டாயமாக மாற்ற வேண்டிய அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே ஆசிய கோப்பை அணியிலிருந்து அவரை வெளியே எடுத்து உலகக்கோப்பை அணியில் அவரை சேர்க்க தேர்வு குழுவினர் யோசிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்