முத்தரப்பு டி20 கிரிக்கெட்; டாக்ரெல் அரைசதம்...அயர்லாந்து 161 ரன்கள் சேர்ப்பு

அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக டாக்ரெல் 53 ரன்கள் எடுத்தார்.

Update: 2024-05-24 10:37 GMT

Image Courtesy: @cricketireland

ஹேக்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ள 20 அணிகளில் பாகிஸ்தானை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன.

இந்த தொடரில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் ஆட உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த 3 அணிகளும் முத்தரப்பு டி20 தொடரில் ஆடி வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 6வது டி20 போட்டியில் நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பால்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பால்பிர்னி 5 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து களம் இறங்கிய லோர்கான் டக்கர் 4 ரன், ஹேரி டெக்டர் 1 ரன், நிலைத்து நின்று ஆடிய ஸ்டிர்லிங் 36 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து கர்டிஸ் கேம்பர் மற்றும் டாக்ரெல் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்த நிலையில் கர்டிஸ் கேம்பர் 37 ரன்னிலும், அடுத்து வந்த கரேத் டெலானி 2 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நிண்று ஆடிய டாக்ரெல் 29 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக டாக்ரெல் 53 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்