மாநில பெண்கள் ஆக்கி ஈரோடு அணி ‘சாம்பியன்’

8-வது மாநில சீனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது.

Update: 2020-01-09 23:39 GMT
சென்னை,

மாவட்டங்களுக்கு இடையிலான 8-வது மாநில சீனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஈரோடு-சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஈரோடு அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஈரோடு அணியில் அம்முகுட்டி 13-வது நிமிடத்திலும், நர்மதா 19-வது நிமிடத்திலும், ரூபஸ்ரீ 35-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் திருப்பூர்-திருநெல்வேலி அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் திருப்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலியை சாய்த்து 3-வது இடத்தை தனதாக்கியது. திருப்பூர் அணியின் வெற்றிக்கான கோலை அந்த அணி வீராங்கனை ஜான்சி 45-வது நிமிடத்தில் அடித்து அசத்தினார்.

பரிசளிப்பு விழாவுக்கு அன்னை எண்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குனர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஸ்ரீ விநாயகா மைன்ஸ் நிர்வாகி வி.முருகன் பரிசு வழங்கினார்.

தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவர் சேகர் ஜே.மனோகரன், பொதுச்செயலாளர் ரேணுகாலட்சுமி உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்