ஃபார்முலா ஒன் கார் பந்தய வருமானம் வரிக்கு உட்பட்டது - உச்சநீதிமன்றம்

இந்தியாவில் ஃபார்முலா ஒன் கார் பந்தய வருமானம் வரிக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Update: 2017-04-24 21:44 GMT
புதுடெல்லி

இந்தியாவில் உலகப் புகழ்பெற்ற ஃபார்முலா கார் பந்தயத்தை ஜெய்ப்பி குரூப் சர்வதேச அமைப்புடன் இணைந்து நடத்தி வருகிறது. இந்தப் போட்டிகள் தலைநகர் டெல்லிக்கு அருகில் நொய்டாவில் நடத்தப்படுகின்றன. 2011 ஆம் ஆண்டிலிருந்து இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டிலிருந்து இப்போட்டிகள் வரி தொடர்பான சிக்கல் எழுந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வரி மதிப்பீட்டாளர் ஒருவரின் மூலம் எவ்வளவு வரி செலுத்தப்பட வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றம் விரைவில் தெரிவிக்கும். நீதிபதிகள் சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது. சென்றாண்டு டெல்லி உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.

கார் பந்தயம் நடத்த சர்வதேச அமைப்பிற்கு தரப்படும் நிதியை காப்புரிமைத்தொகையாயாக கருத முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கார் பந்தயப் போட்டிகளை இந்தியாவில் நடத்த ஜெய்ப்பி குரூப் ஐந்தாண்டு ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டுள்ளது. இப்போட்டிகளின் போது பயன்படுத்தப்படும் லோகோ, சின்னங்கள் ஆகியவற்றிற்காக இந்திய நிறுவனம் சர்வதேச நிறுவனத்திற்கு பணம் கொடுத்துள்ளது. இவற்றை காப்புரிமை கணக்கில் கொள்ள முடியாது என்பதால் வரிக்கு உட்பட்டதே என நீதிமன்றம் தெரிவித்தது. இவை போட்டியை பிரபலப்படுத்த பயன்படக்கூடியவையாகும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 

மேலும் செய்திகள்