ரஷிய பார்முலா1 கார்பந்தயம்: பின்லாந்து வீரர் வால்டெரி முதலிடம்

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4–வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சோச்சி நகரில் நேற்று நடந்தது.

Update: 2017-04-30 20:02 GMT

சோச்சி,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4–வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சோச்சி நகரில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 309.745 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர். இதில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 1 மணி 28 நிமிடம் 08.743 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். பார்முலா1 பந்தயத்தில் அவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அவரை விட 0.617 வினாடி பின்தங்கிய முன்னாள் சாம்பியன் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 2–வது இடத்தை பிடித்து 18 புள்ளிகளை பெற்றார். பின்லாந்தின் கிமி ரெய்க்கோனன் 3–வதாகவும், இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 4–வதாகவும் வந்தனர். போர்ஸ் இந்தியா அணிக்காக கார் ஓட்டும் செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்) முறையே 6–வது, 7–வது இடங்களை பிடித்து 8, 6 புள்ளிகள் வீதம் பெற்றனர்.

4 சுற்று முடிவில் செபாஸ்டியன் வெட்டல் 86 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 73 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் 63 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும் உள்ளனர். 5–வது சுற்று போட்டி வருகிற 14–ந்தேதி ஸ்பெயினில் நடக்கிறது.

மேலும் செய்திகள்