பிற விளையாட்டு
தெற்காசிய தடகள போட்டியில் வென்ற தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது

3–வது தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்தது. இந்திய அணியில் இடம் பெற்று பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது.
சென்னை, 3–வது தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்தது. இதில் இந்தியா 20 தங்கம், 22 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கம் வென்றது. இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த தமிழக வீரர்–வீராங்கனைகள் 5 தங்கம், 5 வெள்ளிப்பதக்கம் வென்றதும் இதில் அடங்கும். தமிழக வீரர்கள் நிதின் 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், கமால்ராஜ் டிரிபிள்ஜம்ப்பில் தங்கப்பதக்கமும், ராஜேஷ் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், வீராங்கனைகள் சுபா 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், கிரேசினா மெர்லி உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கமும், புனிதா நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கமும், பிரியதர்ஷினி டிரிபிள்ஜம்ப்பில் தங்கப்பதக்கமும், காருண்யா வட்டு எறிதலில் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னையில் நேற்று நடத்தப்பட்டது. விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ரீட்டா ஹாரிஷ் தாக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்–வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். விழாவில் தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், செயலாளர் சி.லதா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.