ஆசிய விளையாட்டு போட்டி இந்திய அணியில் 524 வீரர்–வீராங்கனைகள்

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் 524 வீரர்–வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

Update: 2018-07-03 21:00 GMT

புதுடெல்லி,

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் 524 வீரர்–வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

ஆசிய விளையாட்டு போட்டி

18–வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18–ந் தேதி முதல் செப்டம்பர் 2–ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு கடந்த ஜூன் மாதம் சமர்பித்தது. இதில் வீரர்கள்–வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 2,370 பேர் இடம் பிடித்து இருந்தனர்.

இந்திய அணி அறிவிப்பு

இந்த உத்தேச பட்டியலில் இடம் பிடித்து இருந்த வீரர்–வீராங்கனைகளில் 524 பேருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்து இருக்கிறது. இதனை அடுத்து ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அறிவித்தது.

இந்திய அணியில் 277 வீரர்கள், 247 வீராங்கனைகள் இடம் பிடித்து இருக்கிறார்கள். இந்திய அணியினர் 36 போட்டிகளில் களம் காணுகிறார்கள். அதிகபட்சமாக தடகள பிரிவில் 52 பேர் இடம் பெற்றுள்ளனர். ஆக்கி அணியில் 36 பேரும், கைப்பந்து அணியில் 28 பேரும், துப்பாக்கி சுடுதலில் 28 பேரும், கபடி அணியில் 24 பேரும், பேட்மிண்டன் அணியில் 20 பேரும், கராத்தே அணியில் 2 பேரும் இடம் பிடித்து இருப்பதும் இதில் அடங்கும்.

கூடுதலாக 8 போட்டியில் பங்கேற்பு

கடந்த (2014) ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் 541 வீரர்–வீராங்கனைகள் இடம் பிடித்து இருந்தனர். 28 போட்டியில் இந்திய அணியினர் பங்கேற்றனர். ஆனால் இந்த முறை கராத்தே, செபக்தக்ரா, ரோலர் ஸ்கேட்டிங், டிரையத்லான் உள்பட கூடுதலாக 8 விளையாட்டு போட்டியில் இந்திய அணியினர் கலந்து கொள்கிறார்கள்.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய தடகள அணியில் இடம் பிடித்து இருக்கும் 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை டின்டு லூக்கா, 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை நிர்மலா, உயரம் தாண்டுதல் வீரர் சேத்தன் உள்பட 11 பேரை தகுதி சுற்று போட்டியில் கலந்து கொள்ளும்படி இந்திய தடகள சம்மேளனம் அறிவுறுத்தி இருக்கிறது. இதில் அவர்கள் செயல்படும் திறனை பொறுத்து தான் இந்திய அணியில் தொடருவது இறுதி செய்யப்படும்.

ஆசிய போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பில் கால்பந்து அணி இடம் பெறாததற்கு அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்