துளிகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசுகிறார்.

Update: 2018-07-22 21:00 GMT

ஆக்கி: நியூசிலாந்தை பந்தாடியது இந்தியா

இந்தியா – நியூசிலாந்து ஆண்கள் ஆக்கி அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4–0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை பந்தாடியது. இந்திய அணியில் ரூபிந்தர்சிங் (8–வது நிமிடம்), சுரேந்தர் (15–வது நிமிடம்), மன்தீப்சிங் (44–வது நிமிடம்), ஆகாஷ்தீப்சிங் (60–வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். ஏற்கனவே முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்த இந்திய அணி இந்த தொடரை 3–0 என்ற கணக்கில் முழுமையாக தனதாக்கியது.

பெண்கள் ஆக்கியில் அர்ஜென்டினா அபாரம்

16 அணிகள் பங்கேற்றுள்ள 14–வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. 2–வது நாளான நேற்று ‘சி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா 6–2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்தது. மற்றொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) இத்தாலி அணி 3–0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.

‘இரண்டு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்க வேண்டும்’– அசாருதீன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசுகிறார். அவரது பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறுகிறார்கள். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவன் அணியில், அஸ்வினுடன் அவரையும் சேர்க்க வேண்டும். ஆடுகளத்தில் புற்கள் நிறைய இருந்தால் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களம் இறங்கலாம். ஆனால் வெற்றி பெற வேண்டும் என்றால் 3 வேகப்பந்து வீச்சாளர், 2 சுழற்பந்து வீச்சாளர் என்ற பாணியை கடைபிடிப்பதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் போக போக ஆடுகளம் உலர்ந்து போகும். கடைசி இரு நாட்களில் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபடும்’ என்றார்.

இலங்கை வீரர் குணதிலகா இடைநீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் 27 வயதான குணதிலகா, வீரர்களின் நடத்தை விதிமுறையை மீறி நடந்து கொண்டதால் அவரை சர்வதேச போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்வதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது டெஸ்டில் அவர் விளையாடி வருவதால் அந்த போட்டி முடிந்ததும் இடைநீக்கம் அமலாகும். ஆனால் அவர் எந்த மாதிரியான ஒழுங்கீனத்தில் ஈடுபட்டார் என்பது தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்