45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

Update: 2018-08-18 21:30 GMT

ஜகர்தா, ஆக.19–

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆசிய விளையாட்டு போட்டி

ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டி 1951–ம் ஆண்டு முதல் அரங்கேறி வருகிறது. இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி 18–வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 2–ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

கோலாகலமாக தொடங்கியது

இந்த போட்டியின் தொடக்க விழா ஜகர்தாவில் உள்ள ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கியது. போட்டியை இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோடோ முறைப்படி தொடங்கி வைத்தார். ஆசிய ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் பல்வேறு நாடுகளில் பயணித்து கடைசியாக தொடக்க விழா நடைபெறும் இடத்துக்கு அணிவகுப்பாக எடுத்து வரப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தோனேஷியாவை சேர்ந்த முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை சுசி சுசாந்தி போட்டிக்கான தீபத்தை ஏற்றி வைத்தார்.

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் வீரர்–வீராங்கனைகள் தங்கள் நாட்டின் தேசிய கொடிகளுடன் மைதானத்தில் மிடுக்காக அணி வகுத்து வந்தனர். இந்த போட்டிக்கான இந்திய அணியில் 572 வீரர்–வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணியினர் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் அணிவகுத்து சென்றனர்.

கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

பரம எதிரிகளான தென்கொரியாவும், வட கொரியாவும் ஒரே கொடியின் கீழ் வகுத்து சென்றது பார்வையாளர்களை கவர்ந்தது. இந்தோனேஷியா அணியினர் அணிவகுத்து வருகையில் ஸ்டேடியத்தில் கூடி இருந்த 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது.

தொடக்க விழாவில் இடம் பெற்ற அந்த நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆட்டம், பாட்டங்கள் ரசிகர்களின் கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் இருந்தது. லேசர் ஒளிவெள்ளத்திற்கு மத்தியில் அரங்கேறிய சாகச நிகழ்ச்சிகள் பார்ப்போரை வியக்க வைத்தது. இந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை உலகுக்கு எடுத்துரைத்தார்கள். உள்ளூரில் புகழ் பெற்ற இசை கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் நாட்டின் பாரம்பரிய இசையை மீட்டி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தனர்.

வண்ணமயமான வாணவேடிக்கை

நிறைவாக நடைபெற்ற வண்ணமயமான வாணவேடிக்கையால் ஸ்டேடியம் மட்டுமின்றி வானமே ஜொலித்தது. நில அதிர்வு சம்பவங்களின் பாதிப்புக்கு மத்தியிலும் இந்தோனேஷியா தொடக்க விழாவை ஜோராக நடத்தி காட்டியது. விளையாட்டு போட்டிகள் இன்று முதல் நடைபெறும்.

இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர்–வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘நமது வீரர்களை நினைத்து பெருமிதம் கொள்வதாகவும், நமது வீரர்கள் போட்டியில் சிறந்த திறனை வெளிப்படுத்துவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கருக்கும் இந்திய அணியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்