ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 பதக்கம்

ஆசிய விளையாட்டில் இந்தியா நேற்று ஒரே நாளில் 5 பதக்கத்தை அள்ளியது. இதில் 16 வயது துப்பாக்கி சுடுதல் வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்று பிரமிக்க வைத்தார்.

Update: 2018-08-21 23:30 GMT
பாலெம்பேங்,

45 நாடுகள் பங்கேற்றுள்ள 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று இந்தியா ஒரே நாளில் 5 பதக்கங்களை அள்ளியது. இதில் 16 வயதான துப்பாக்கி சுடுதல் வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கத்தை ‘சுட்டு’ அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தகுதி சுற்று முடிவில் 8 வீரர்கள் இறுதி சுற்றை எட்டினர். இதில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா ஆகிய இந்தியர்களும் அடங்குவர். இறுதி சுற்றில் மொத்தம் 24 ரவுண்ட் இலக்கை நோக்கி சுட வேண்டும். குறிப்பிட்ட ரவுண்டுக்கு பிறகு வீரர்கள் வெளியேறி கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் சாதுர்யமாக செயல்பட்ட சவுரப் சவுத்ரி, முன்னாள் உலக சாம்பியன் ஜப்பானின் தோமோயுகி மாட்சுடா ஆகியோர் மட்டும் கடைசியில் நீடித்தனர். 22 ரவுண்ட் முடிவில் இவர்களில் யார் தங்கப்பதக்கம் வெல்வார்கள் என்பதை கணிக்க முடியாத நிலைமையே காணப்பட்டது.

பரபரப்பான கட்டத்திலும் பதற்றமடையாமல் இலக்கை துல்லியமாக குறிவைத்து சுட்ட சவுரப் சவுத்ரி கடைசி இரு ரவுண்டுகளில் முறையே 10.2 மற்றும் 10.4 புள்ளிகள் வீதம் பெற்றார். ஆனால் கொஞ்சம் தடுமாறிய அனுபவம் வாய்ந்த மாட்சுடா 8.9 மற்றும் 10.3 வீதம் புள்ளி எடுத்து பின்தங்கினார்.

24 ஷாட் முடிவில் சவுரப் சவுத்ரி மொத்தம் 240.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தார். 42 வயதான மாட்சுடா 239.7 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா 219.3 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். ஒலிம்பிக்கில் 4 தங்கப்பதக்கம் வென்ற வரலாற்று நாயகன் தென்கொரியாவின் ஜின் ஜோங் கோ 178.4 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஆசிய விளையாட்டு வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கத்தை ருசித்த 5-வது இந்தியர் என்ற சிறப்பை சவுரப் சவுத்ரி பெற்றார். இதற்கு முன்பு ஜஸ்பால் ராணா, ரன்திர்சிங், ஜிது ராய், ரஞ்சன் சோதி ஆகியோர் தங்கம் வென்று இருக்கிறார்கள். வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்திய 29 வயதான அபிஷேக் வர்மாவுக்கு இது தான் முதல் சர்வதேச போட்டியாகும். 2015-ம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடுதல் பந்தயத்தில் கவனம் செலுத்தி வரும் அபிஷேக் வர்மா அரியானா மாநிலம் ரோட்டாக்கை சேர்ந்த வழக்கறிஞர் ஆவார்.

துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று நிலை பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். அவர் மொத்தம் 452.7 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். அவரை விட மயிரிழையில் முந்திய சீனாவின் ஹூய் ஜிசெங் 453.3 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

அரியானாவைச் சேர்ந்த 37 வயதான ராஜ்புத் மீது 2016-ம் ஆண்டு இறுதியில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஒருவர் கற்பழிப்பு புகார் கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் எதிரொலியாக இந்திய விளையாட்டு ஆணையத்தில் உதவி பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் மறுத்தார். சமீபத்தில் காமன்வெல்த் போட்டியில் மகுடம் சூடிய ராஜ்புத் இப்போது ஆசிய விளையாட்டிலும் பதக்கம் வென்று இருக்கிறார். அவர் கூறுகையில், ‘இப்போது எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். இந்த போட்டியில் ஒரு ஷாட்டில் 8.4 புள்ளி மட்டுமே எடுத்தேன். அதனால் தங்கம் வெல்ல முடியாமல் போய் விட்டது. அத்துடன் வெப்பமான சீதோஷ்ண நிலையும், காற்றின் தாக்கமும் கடினமாக இருந்தது’ என்றார்.

செபக்தக்ரா விளையாட்டில் ஆண்களுக்கான ரெகு பிரிவில் இந்திய அணி அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 0-2 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இருப்பினும் அரைஇறுதியை எட்டியதன் மூலம் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. ஆசிய விளையாட்டில் செபக்தக்ராவில் இந்தியா பதக்கத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும்.

மல்யுத்தத்தில் பெண்களுக்கான 68 கிலோ உடல் எடைப்பிரிவில் (பிரிஸ்டைல்) இந்திய வீராங்கனை திவ்யா கக்ரான் கால்இறுதியில் 1-11 என்ற புள்ளி கணக்கில் மங்கோலியாவின் ஷார்கு டுமென்ட்செட்செக்குவிடம் தோல்வி அடைந்தார். ஆனால் ஷார்கு இறுதிப்போட்டி வரை முன்னேறியதால் அவரிடம் தோல்வி கண்ட திவ்யாவுக்கு ‘ரிபிசாஜ்’ மூலம் இன்னொரு வாய்ப்பு கிட்டியது. இதன் மூலம் அவர் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனத்தைபேயின் வென்லிங் சென்னிடம் மல்லுகட்டினார். இதில் அசத்திய உத்தரபிரதேசத்தை சேர்ந்த 20 வயதான திவ்யா 10-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிக்கனியை பறித்து, வெண்கலத்தை தனதாக்கினார்.

பதக்கப்பட்டியலில் சீனா 30 தங்கம், 18 வெள்ளி, 12 வெண்கலம் என்று மொத்தம் 60 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஜப்பான் 2-வது இடத்திலும் (12 தங்கம் உள்பட 47 பதக்கம்), தென்கொரியா 3-வது இடத்திலும் (8 தங்கம் உள்பட 34 பதக்கம்) உள்ளன. இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என்று மொத்தம் 10 பதக்கங்களுடன் 7-வது இடம் வகிக்கிறது.

மேலும் செய்திகள்