துளிகள்

பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

Update: 2018-10-27 21:00 GMT

* தியோதர் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா ‘சி’–இந்தியா ‘பி’ அணிகள் டெல்லியில் நேற்று மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்தியா ‘சி’ அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. கேப்டன் ரஹானே ஆட்டம் இழக்காமல் 144 ரன்னும், விக்கெட் கீப்பர் இஷான் கி‌ஷன் 114 ரன்னும் விளாசினர். அடுத்து களம் இறங்கிய இந்தியா ‘பி’ அணி 46.1 ஓவர்களில் 323 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. இதனால் இந்தியா ‘சி’ அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ‘சாம்பியன்’ பட்டத்தை தனதாக்கியது. ‘பி’ அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்(148 ரன்) சதம் அடித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது.

*சென்னை எழும்பூரில் நடந்து வரும் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே அணி 3–1 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தியது. 4–வது ஆட்டத்தில் ஆடிய தெற்கு ரெயில்வே அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். தெற்கு ரெயில்வே அணியில் நம்பி கணேஷ், பிரவீன், செல்வா தலா ஒரு கோல் அடித்தனர். இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி–இந்தியன் வங்கி (பிற்பகல் 2 மணி), மத்திய கலால் வரி–சாய் (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.

* பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 13–21, 16–21 என்ற நேர்செட்டில் பிங்ஜியோவிடம் (சீனா) வீழ்ந்தார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 16–21, 19–21 என்ற நேர்செட்டில் ‘நம்பர் ஒன்’ வீரரான கென்டோ மொமோட்டோவிடம் (ஜப்பான்) பணிந்தார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

*கொழும்பில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. ஜாசன் ராய் அரைசதம் (6 சிக்சர், 4 பவுண்டரியுடன் 69 ரன்) விளாசினார்.

மேலும் செய்திகள்