இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று சென்னை மாணவர் சாதனை

இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று சென்னை மாணவர் சாதனை படைத்தார்.

Update: 2019-01-16 22:45 GMT
சென்னை,

சர்வதேச ஓபன் செஸ் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள சென்னை மாணவர் டி.குகேஷ் நேற்று முன்தினம் தனது 9-வது சுற்று ஆட்டத்தின் மூலம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார். 12 வயது 7 மாதம் 17 நாட்களில் குகேஷ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை தனதாக்கி இருக்கிறார். இதன் மூலம் குறைந்த வயதில் கிராண்ட்ஸ்மாஸ்டர் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையை சேர்ந்த பள்ளி மாணவரான பிரக்ஞானந்தா 12 வயது 10 மாதத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று இருந்ததே சாதனையாக இருந்தது. அதனை குகேஷ் தகர்த்து புதிய சாதனை படைத்தார். கடந்த 2002-ம் ஆண்டில் உக்ரைன் வீரர் செர்ஜி கர்ஜாகின் 12 வயது 7 மாதத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றதே உலக அளவில் சாதனையாக உள்ளது. உலக அளவில் இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்ற 2-வது வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார். குகேசின் தந்தை ரஜினிகாந்த், தாயார் பத்மா ஆகியோர் டாக்டர்கள் ஆவர்.

இந்தியாவின் 59-வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்து இருக்கும் குகேஷ் அளித்த பேட்டியில், ‘கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலக அளவில் இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை எட்டிய செர்ஜி கர்ஜாகின் சாதனையை தகர்க்க முடியாமல் போனது லேசான ஏமாற்றம் அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்