துளிகள்

துபாயில் நேற்று நடந்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நேபாளம் அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2019-01-26 21:00 GMT

தென்ஆப்பிரிக்க அணி வெற்றி

செஞ்சுரியனில் நேற்று முன்தினம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் இமாம் உல்–ஹக்கின் (101 ரன்) சதத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்கா 33 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து மழை நீடித்ததால் டக்வெர்த்–லீவிஸ் விதிமுறைப்படி தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ரீஜா ஹென்ரிக்ஸ் 83 ரன்கள் விளாசினார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்ஆப்பிரிக்கா 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் 4–வது ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது. புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற சீருடை அணிந்து விளையாட உள்ளனர்.

ஹோல்டர் இரட்டை சதம் அடித்து அசத்தல்

பிரிட்ஜ்டவுனில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 212 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 415 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஜாசன் ஹோல்டர் (202 ரன், 229 பந்து, 23 பவுண்டரி, 8 சிக்சர்) முதல்முறையாக இரட்டை சதம் அடித்தார். பேட்டிங்கில் 8–வது வரிசையில் இரட்டை சதம் கண்ட சாதனையாளர்களின் பட்டியலில் அவர் 3–வது வீரராக இணைந்தார். விக்கெட் கீப்பர் டாவ்ரிச் 116 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 628 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடும் இங்கிலாந்து அணி 34 ஓவர் முடிந்திருந்த போது ஒரு விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது.

ரஞ்சி கிரிக்கெட்: கர்நாடக அணி முன்னிலை

ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகா – சவுராஷ்டிரா இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் கர்நாடகா 275 ரன்களில் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா 2–வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்திருந்தது. 3–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய சவுராஷ்டிரா 236 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. அடுத்து 39 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய கர்நாடக அணி ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்து மொத்தம் 276 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் கோபால் 61 ரன்களும் (நாட்–அவுட்), மயங்க் அகர்வால் 46 ரன்களும் எடுத்தனர். இன்று 4–வது நாள் ஆட்டம் நடைபெறும்.

தெண்டுல்கரின் சாதனையை முறியடித்த நேபாள வீரர்

துபாயில் நேற்று நடந்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நேபாளம் அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி 242 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ரோகித் பாடெல் 55 ரன் (58 பந்து) அடித்தார். ரோகித் பாடெலுக்கு தற்போதைய வயது 16 ஆண்டு 146 நாட்கள். இதன் மூலம் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரே சர்வதேச போட்டியில் குறைந்த வயதில் அரைசதம் அடித்தவர் என்ற சிறப்பை பெற்றிருந்தார். 1989–ம் ஆண்டு பைசலாபாத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அரைசதம் (59 ரன்) எடுத்த போது தெண்டுல்கரின் வயது 16 ஆண்டு 213 நாட்கள். அவரது 30 ஆண்டு கால சாதனையை ரோகித் பாடெல் முறியடித்துள்ளார்.

மேலும் செய்திகள்