‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க வேண்டும் - பி.வி.சிந்து ஆசை

‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க வேண்டும் என பி.வி.சிந்து தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

Update: 2019-08-28 23:40 GMT
ஐதராபாத்,

உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அளித்த ஒரு பேட்டியில், ‘பேட்மிண்டன் தரவரிசையில் விரைவில் முதலிடத்தை பிடிப்பேன் என்று நம்புகிறேன். உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக என்னை பார்க்க ஆசைப்படுகிறேன். ஆனால் தரவரிசை குறித்து சிந்திப்பதை விட, இன்னும் நிறைய தொடர்களில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். போட்டிகளில் அசத்தினால், சிறந்த தரவரிசை தானாகவே கிடைக்கும்’ என்றார். தரவரிசையில் தற்போது 5-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து அதிகபட்சமாக 2-வது இடம் வரை முன்னேறி இருந்தார்.

உலக பேட்மிண்டனில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றிய சாய் பிரனீத், 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக பேட்மிண்டனில் பதக்கத்துக்கு முத்தமிட்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். அவர் அளித்த பேட்டியில், ‘2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே எனது இலக்கு. அடுத்து வரும் தொடர்களில் நான் அரைஇறுதி, கால்இறுதி அல்லது பட்டத்தை வென்று தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், எனது தரவரிசையில் ஏற்றம் கண்டு ஒலிம்பிக்குக்கு தகுதி பெற வாய்ப்பு கிடைக்கும். அதைத் தான் நான் எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்றார். சாய் பிரனீத் தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசையில் 4 இடங்கள் உயர்ந்து 15-வது இடத்தை பிடித்துள்ளார்.

2020-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி நிலவரப்படி பேட்மிண்டன் தரவரிசையில் டாப்-16 இடத்திற்குள் உள்ள வீரர்களில் ஒரு நாட்டை சேர்ந்த இருவர் மட்டுமே ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்