பல்கலைக்கழக தடகளம்: 100 மீட்டர் ஓட்டத்தில் திருச்சி வீரர் கதிரவன் முதலிடம்

பல்கலைக்கழக தடகள போட்டியில், 100 மீட்டர் ஓட்டத்தில் திருச்சி வீரர் கதிரவன் முதலிடம் பிடித்தார்.

Update: 2020-03-01 00:08 GMT
புவனேசுவரம்

முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேசுவரம் மற்றும் கட்டாக்கில் நடந்து வருகிறது. இதில் தடகள போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பல்கலைக்கழக அதிவேக வீரர் பட்டத்தை வெல்வது யார்? என்பதில் கடும் போட்டி நிலவியது. பாரதிதாசன் பல்கலைக்கழக (திருச்சி) வீரர் ஜி.கதிரவன், பாரதியார் பல்கலைக்கழக (கோவை) வீரர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் 10.68 வினாடியில் பந்தய தூரத்தை கடந்தனர். தொழில் நுட்ப கருவியின் உதவியுடன் கணக்கிட்டதில் நூலிழை வித்தியாசத்தில் கதிரவன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கார்த்திகேயனுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. மங்களூரு பல்கலைக்கழக வீரர் விக்னேஷ் 10.72 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனையும், தேசிய சாதனையாளருமான கலிங்கா தொழில் கல்வி மைய (ஒடிசா) வீராங்கனை டுட்டீ சந்த் 11.49 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பெரியார் பல்கலைக்கழக (சேலம்) வீரர் கவுரவ் யாதவ் 2 நிமிடம் 07.32 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

மேலும் செய்திகள்