மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா வெண்கலம் வென்று அசத்தல்

வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா, கஜகஸ்தான் வீரர் டாலெட் நியாஸ்பெகோவை சந்தித்தார்.

Update: 2021-08-08 03:59 GMT
டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ உடல் எடைப்பிரிவில் நேற்று நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா, கஜகஸ்தான் வீரர் டாலெட் நியாஸ்பெகோவை சந்தித்தார். 45 நிமிடங்களுக்கு முன்பாக ‘ரெபிசாஜ்’ பிரிவில் விளையாடி விட்டு வந்த நியாஸ்பெகோவ் சற்று சோர்ந்து காணப்பட்டார். இது பூனியாவுக்கு சாதகமாக அமைந்தது.

முதல்பகுதியில் பிடிகொடுக்காமல் நழுவிய நியாஸ்பெகோவை தண்டிக்கும் விதமாக பூனியாவுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரை வெளியே தள்ளி பூனியா மேலும் ஒரு புள்ளி எடுத்தார்.

அடுத்த பாதியில் (3 நிமிடம்) பஜ்ரங் பூனியாவின் கை முழுமையாக ஓங்கியது. மூன்று முறை அவரை மடக்கி பிடித்து மைதானத்தில் சரித்து தலா 2 புள்ளி வீதம் பெற்றார். ஆனால் நியாஸ் பெகோவால் கடைசி வரை ஒரு புள்ளி கூட எடுக்க முடியவில்லை.

முடிவில் பஜ்ரங் பூனியா 8-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 27 வயதான பஜ்ரங் பூனியா அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு ரூ.2½ கோடி பரிசுத் தொகையும், அரசு வேலையும், சலுகை விலையில் நிலமும் வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்