பார்முலா 1 கார் பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி

பார்முலா 1 கார் பந்தயத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி பெற்றுள்ளார்.

Update: 2021-11-08 23:35 GMT
மெக்சிகோ,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 18-வது சுற்றான மெக்சிகோ கிராண்ட்பிரி பந்தயம் மெக்சிகோ சிட்டியில் உள்ள ஓடுதளத்தில் நடந்தது. 305.354 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் வழக்கம் போல 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். 

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 38 நிமிடம் 39.086 வினாடியில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்து 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். இந்த சீசனில் அவர் பெற்ற 9-வது வெற்றி இதுவாகும். 

அவரை விட 16.555 வினாடி பின்தங்கிய நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2-வது இடத்தையும், 17.752 வினாடிகள் பின்தங்கிய மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் (ரெட்புல் அணி) 3-வது இடத்தையும் பெற்றனர்.

இதுவரை நடந்த சுற்றுகள் முடிவில் வெர்ஸ்டப்பென் 312.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஹாமில்டன் 293.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அடுத்த சுற்றான பிரேசில் கிராண்ட்பிரி பந்தயம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்