கேன்டிடேட் செஸ் போட்டி: 5-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் வெற்றி

இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ், அஜர்பைஜான் நாட்டு வீரர் நிஜாத் அபாசவ்வை எதிர்கொண்டார்

Update: 2024-04-10 21:45 GMT

டொரோன்டோ,

உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை முடிவு செய்யும் 'பிடே' கேன்டிடேட் செஸ் போட்டித் தொடர் கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை என மொத்தம் 14 சுற்றில் விளையாட வேண்டும். இதன் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்கள்.

இந்த நிலையில் 5-வது சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு நடந்தன. இதன் ஆண்கள் பிரிவின் ஒரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ், அஜர்பைஜான் நாட்டு வீரர் நிஜாத் அபாசவ்வை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேசிடம் 87-வது நகர்த்தலில் 3 காய்களும், அபாசவ்விடம் 2 காய்களும் எஞ்சியிருந்த போது, அபாசவ் தோல்வியை ஒப்புக் கொண்டார். 6 மணி நேரம் நீடித்த போராட்டம் குகேசுக்கு சுபமாக முடிந்தது. சென்னையைச் சேர்ந்த 17 வயதான குகேசுக்கு இது 2-வது வெற்றியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் தமிழக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, ரஷியாவின் இயான் நெபோம்நியாச்சியை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 44-வது நகர்த்தலில் டிரா செய்தார். அமெரிக்காவின் ஹிகரு நகமுரா, பிரான்சின் பிரோவ்ஜா அலிரெஜாவுக்கு 65-வது நகத்தலில் 'செக்' ைவத்து முதல் வெற்றியை சுவைத்தார். இந்தியாவின் விதித் குஜராத்தி- 2-ம் நிலை வீரர் அமெரிக்காவின் பேபியானோ காருனா இடையிலான மோதல் 30-வது நகர்த்தலில் டிரா ஆனது. இதில் குஜராத்தி கை ஓங்குவதற்கு நல்ல வாய்ப்பு உருவான போதிலும், அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டார். அபாயகரமான நிலையில் இருந்து தப்பித்து டிரா செய்ததே எனக்கு நல்ல முடிவு தான் என்று காருனா தெரிவித்தார்.

இதுவரை நடந்துள்ள 5 சுற்று முடிவில் குகேஷ் 3½ புள்ளியுடன் நெபோம்நியாச்சியுடன் இணைந்து முதலிடம் வகிக்கிறார். காருனா 3 புள்ளியுடன் 2-வது இடத்திலும், பிரக்ஞானந்தா 2½ புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

பெண்கள் பிரிவில் நடந்த 4 ஆட்டங்களிலும் முடிவு கிடைக்கவில்லை. பிரக்ஞானந்தாவின் சகோதரியான ஆர். வைஷாலி, உக்ரைனின் அன்னா முசிசக்கை சந்தித்தார். இந்த ஆட்டம் 48-வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு இந்திய வீராங்கனை கோனொரு ஹம்பி, ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோரியாச்சினாவை 44-வது நகர்த்தலில் 'டிரா' கண்டார்.பெண்களில் சீனாவின் டான் ஜோங்யி 3½ புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். கோரியாச்சினா 3 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். வைஷாலி 2½ புள்ளியுடன் 3-வது இடத்தை மேலும் இருவருடன் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்